ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முன்னேற்ற கண்ட சோஃபி டிவைன், எமி ஜோன்ஸ்!

Updated: Tue, Apr 09 2024 20:37 IST
Image Source: Google

இங்கிலாந்து மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5  டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு ஆறுதல் வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை பிடித்துள்ளார் சோஃபி டிவைன்.

அதேசமயம் இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை எமி ஜோன்ஸும் 5 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலின் முதலிடத்தில் இங்கிலாந்து நாட் ஸ்கைவர் பிரண்ட் நீடித்து வருகிறார். மேலும் இப்பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா நான்காம் இடத்திலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 9ஆம் இடத்திலும் நீடித்துள்ளனர். 

Also Read: Join Our WhatsApp Channel For World Cup Updates

அதேபோல் மகளிர் ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் கேட்  கிராஸ் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தையும், நியூசிலாந்து மகளிர் அணியின் அமெலியா கெர் 4 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும், சக வீராங்கனை ஜெஸ் கெர் 4 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். இப்பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 5ஆம் இடத்தில் தொடர்கிறார். இதில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியா வீராங்கனையும் அவர் மட்டுமே.

TAGS

Related Cricket News

Most Viewed Articles