சர்வதேச கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அணிகள்; இதில் இந்தியாவுக்கும் பங்குண்டு!

Updated: Wed, May 19 2021 18:26 IST
Image Source: Google

கடந்த ஒருவாரமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கின் விவாதப்பொருளாக மாறியிருப்பது, ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட்டின் அந்த ஒரு பேட்டி தான். 

இங்கிலாந்து கவுண்டி அணிக்காக விளையாடி வந்த அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் போது நான் பந்தை சேதப்படுத்தியது அணியிலிருந்து பந்துவீச்சாளர்களுக்கு தெரியும் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். 

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அணிகள் குறித்து ஒரு சிறு தொகுப்பை பார்ப்போம்...!

1. ஆஸ்திரேலியா

கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை வீரர்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து ஐசிசி மேற்கொண்ட விசாரணையில் சிடில் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. ஆனால் இதற்காக அவருக்கு ஐசிசி எந்த விதமான தண்டனையையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கடுத்தது தான் 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் போது காமரூன் பான்கிராஃப்ட் உப்புத்தாள் கொண்டு பந்தை செதப்படுத்தினார். இது அங்கிருந்த தொலைக்காட்சி வாயிலாக நடுவர்களுக்கு தெரியவந்தது. 

இதையடுத்து பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்டிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 75 விழுக்காடு ஊதியத்தை அபராதமாகவும், 9 மாதம் தடையையும் ஐசிசி விதித்தது. மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 100 விழுக்காடு ஊதியத்தையும் ஓராண்டு தடையையும் ஐசிசி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

2. இங்கிலாந்து 

1994ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது, அப்போதைய இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன் பந்தை தன்மையை மாற்ற முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். இதையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, அவருக்கு 2000 யூரோ அபராதமாக விதிக்கப்பட்டது.

இதையடுத்து 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து அணியின் மார்கஸ் டிரெஸ்கோத்திக் பந்தை பளபளப்பாக வைத்திருக்க முர்ரே மிண்ட்ஸை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மூன்று ஆண்டுள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

அதன்பின் 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான ஸ்டூவர் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது தங்கள் காலணிகளை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இதற்காக அவர்களுக்கு எந்தவிதமான தண்டனைகளும், அபராதமும் விதிக்கப்படவில்லை. 

3. தென்ஆப்பிரிக்க

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது ஃபாப்  டூ பிளெஸின் தனது பேண்ட் ஸிப் மூலம் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவரே அதை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சேதமடைந்த பந்து மாற்றப்பட்டு, பாகிஸ்தான் அணிக்கு கூடுதலாக ஐந்து ரன்கள் வழங்கப்பட்டது. 

இதையடுத்து 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது, பிலாண்டர் தனது கையால் பந்தை சேதப்படுத்தினார். இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 75 விழுக்காடு அபராதம் விதித்து போட்டி நடுவர் உத்தரவிட்டார். 

4. இந்தியா 

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியின் போது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சச்சின், கள நடுவர்களின் அனுமதியுடனே பந்தில் இருந்த புற்களை நீக்கியதாக விளக்கமளித்தார். இதனை கள நடுவர்களும் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு எந்த வித அபராதமும் விதிக்கப்படவில்லை.

கடந்த 2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர் ராகுல் டிராவிட் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு, அவருக்கு 50 விழுக்காடு கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டது. 

5. பாகிஸ்தான்

2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் வக்கார் யூனிஸ் மீது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக, போட்டி கட்டணத்திலிருந்து 50 விழுக்காடு அபராதமும், தொடரிலிருந்து வெளியேற்றவும் பட்டார். பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக போட்டியில் விளையாட தடை செய்யப்பட்ட முதல் வீரர் என்ற மோசமான பெயரும் அவருக்கு வந்தது. 

அதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஷாகித் அஃப்ரிடி பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து அணிகளை தவிர நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளும் பந்தை சேதப்படுத்திய வழக்குகளில் சிக்கியுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

TAGS

Related Cricket News ::

Most Viewed Articles