இந்திய அணியின் பயிற்சியாளராக மாறும் டிராவிட்- ரசிகர்களின் எதிர்பார்ப்பும்; கொண்டாட்டமும்!

Updated: Thu, May 20 2021 21:36 IST
Image Source: Google

‘இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ராகுல் டிராவிட். தனது அபாராமான பேட்டிங் திறமையால் உலகின் தலைசிறந்த பவுலர்களையும் மண்ணைக் கவ்வவைத்தவர். இதனலோ என்னவோ டெஸ்ட் கிரிக்கெட்டின் பொக்கிஷம் என்ற அடைமொழியும் இவருக்கு உண்டு. 

இவர் விளையாடும் கவர் டிரைவ்விற்கும், ஃப்ளிக் ஷாட்களுக்கும் மயங்காத ரசிகர்கள் ஏன், கிரிக்கெட் வீரர்கள் கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நேர்த்தியான பேட்டிங்கை சில சமயம் சச்சின், லாரா ஆகியோரிடம் கூட காண இயலாது. இப்படி இருக்கையில் தான் 2012ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு பேரதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அது ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது தான். 

இப்படி தங்களின் ஹீரோவை சர்வதேச களத்தில் காண முடியாமல் கலங்கிய இதயங்களுக்கு, சரியாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று காத்திருந்தது. அதுதான் இந்தியா ஏ அணி மற்றும் இந்திய அண்டர் 19 அணிகளுக்கு தலமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டது தான். 

அதுவரை இந்திய அணியின் பெருஞ்சுவராக செயல்பட்ட டிராவிட், இம்முறை அச்சுவரின் அஸ்திவாரங்களை உருவாக்க களம் கண்டது. இப்பதவியை எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட டிராவிட், புயலுக்கு முன் தோன்று அமைதியைப் போன்று தனது பணியை செய்யத் தொடங்கினார். 

மேற்குறிப்பிட்ட படி புயலுக்கு முன் வரும் அமைதியைப் போன்று இந்தியா ஏ, இந்திய அண்டர் 19 அணிகளுக்கு புதுபுது வீரர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை சர்வதேச அரங்கிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். இவரது இந்த பணியின் போது தான் இந்திய அணியின் எதிர்கால வீரர்களை உருவாக்கும் முயற்சியை செய்தார். 

இந்திய அணியின் எதிர்காலம் ரஞ்சி போட்டிகளிலும், அண்டர் 19 போட்டிகளிலுமே இருக்க வேண்டும், அதிலிருந்தே இந்திய அணிக்கு வீரர்கள் வரவேண்டும். அதுவே இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு ஆரோக்கியமான வழி என்பதை திடமாக நம்பினார். மேலும் உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பெரிதாகக் கருத்தில் கொள்ளாமல், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தேர்வாகும் முறையை மாற்ற வேண்டும் என நினைத்தார். அதைச் சாதித்தும் காட்டியிருக்கிறார்!

அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு செய்த முதல் வேலை, இந்திய ஏ அணிக்கு அதிக போட்டிகள் ஆடும்படி அட்டவணைகள் அமைக்க வேண்டும் என்பது. அதுவும் உள்நாட்டில் அல்ல வெளிநாட்டில் அதிக போட்டிகள் வேண்டுமென்பதில் திட்டவட்டமாக இருந்தார். அவ்வாறு கூறியதன் நோக்கம், சர்வதேசப் போட்டிகளில், எல்லாச் சூழ்நிலைகளிலும் விளையாடுமளவுக்கு இளம் வீரர்கள் முறையாகத் தயாராக வேண்டும் என்பதற்கே.

இதன் ஒருபகுதியாக 2015ஆம் ஆண்டு இந்தியா, தென்ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரை நடத்த உறுதுணையாக இருந்ததோடு, இந்திய அணி தொடரை கைப்பற்றவும் பெரும்பங்காற்றினார். டிராவிட்டைப் பொறுத்தவரை வெற்றிகளை விட, இந்திய அணிக்காக விளையாடுவதற்கு சிறந்த முறையில் வீரர்களை தயார்ப்படுத்த வேண்டும். ஒரே வீரருக்கு மட்டும் வாய்ப்புகள் வழங்காமல், அனைவரது திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதன் பயணாக இந்திய அண்டர் 19 அணி டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுடன் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளாக இருக்கட்டும், இங்கிலாந்து, இலங்கையுடன் நடைபெற்ற வெளியூர் போட்டிகளாக இருக்கட்டும் தொடர் வெற்றிகளை ஈட்டி கொண்டிருந்தது.

இவர் செய்ததில் மற்றொரு அசாத்தியமான விஷயம், 2016 அண்டர் 19 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, அபினவ் முகுந்த், ஜெய்தேவ் உனாட்கட் உள்ளடங்கிய சீனியர் வீரர்கள் அணியுடன், இந்திய அண்டர் 19 அணியை விளையாடச் செய்தது தான். அப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது. 

இதே முனைப்போடு இந்திய அண்டர் 19 அணி  2016 உலக கோப்பை தொடரில் விளையாடியது. அத்தொடரில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்தது இந்திய அணி. ஆனால் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி தோல்வியை தழுவியது. அப்போது கலங்கி போய் நின்ற வீரர்களிடம், ராகுல் டிராவிட் கூறிய விஷயம்  ‘நீங்கள் சாம்பியன்கள் தான். கவலை வேண்டாம்’ என்பதுதான்.

அதற்கடுத்து நடைபெற்ற ஏ அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடரை வென்று காட்டினார். அத்தொடரில் தான் இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், ரிஷப் பந்த் என பல எதிர்கால நட்சத்திரங்கல் இந்திய அணிக்கு கிடைத்தன. 

பின்னர் 2016ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்ட பிறகு, அப்போதைய கேப்டன்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோருடன் ராகுல் டிராவிட் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனையின் முடிவில் ஒவ்வொரு பொசிஷனில் விளையாடும் வீரர்களுக்கும் பேக்கப் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தார். 

இதன் பயணாக 2016 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். அதற்கு பக்கபலமாக இருந்த செயல்பட்டவர் ராகுல் டிராவிட் தான். ஏனெனில் கருண் நாயரும் ராகுல் டிராவிடின் கீழ் பயிற்சி பெற்றவர்தான். அப்போட்டி முடிவுக்கு பின் அப்போதைய பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூரிடமிருந்து வந்த ட்வீட் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. கருண் நாயரை வாழ்த்திய அனுராக், இந்திய ஏ அணியிலிருந்து சிறப்பான வீரர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என்று ட்ராவிட்டை வெகுவாகப் புகழ்ந்திருப்பார்.

அதற்கு அடுத்தபடியாக  2016/17 ரஞ்சி தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை ஓப்பனர் இல்லாமல் திணறிக் கொண்டிருந்த போது, அணித் தேர்வாளர் மிலிந்த் ரேகாவிற்கு யாரைத் தேர்வு செய்வது என்று குழப்பம் இருந்துள்ளது. இதனால்  டிராவிட்டிடம் ஆலோசனை கேட்டார் . டிராவிட் வழங்கிய ஆலோசனையின் மூலம் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், இந்திய அணிக்கு அடுத்த சச்சினையும் அறிமுகம் செய்து வைத்தது. 

ஆம் டிராவிட்டின் ஆலோசனையின் படி மும்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிரித்வி ஷா, அப்போட்டியில் சதமடித்து அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்தார். அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே. இதன் காரணமாக பிரித்வி ஷா இந்திய அணியின் அடுத்த சச்சின் என்றழைக்கப்பட்டார். 

இதற்கிடையில் 2017ஆம் ஆண்டு இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு, கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏன் பிசிசிஐயும் அந்த முடிவையே எடுத்திருந்தது. ஆனால் டிராவிட் அப்பதவியை நிராகரித்துவிட்டார். இதனால் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக நியமித்தது.

இப்படி டிராவிட் செய்ததெல்லாம் தாறுமாறாக ஹிட்டாக, 2018 ஆம் ஆண்டு அண்டர்19 உலகக்கோப்பை வந்தது. இந்த முறையாவது இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, டிராவிட் ஒரு தைரியமான முடிவை செய்திருந்தார். அந்த முடிவு 2016ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆடிய வீரர்கள் இந்தத் தடவை 19 வயதுக்குள் இருந்தாலும் அவர்கள் ஆடக்கூடாது என்பது. அதற்கு மாறாக புது வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், வீரர்கள் அண்டர் 19 போட்டிகளோடு தங்கிவிடக் கூடாது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதாக இருந்தது. இம்முடிவை கேட்ட தேர்வு குழுவினர் சற்று ஆட்டம் கண்டனர். 

ஆனால் டிராவிட் எடுத்த அந்த முடிவிற்குக் கை மேல் பலன் கிடைக்க இந்தியா அண்டர் 19 அணி 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் வெற்றி வாகை சூடியது. ப்ரிதிவி ஷா, சுப்மான் கில், நாகர்கோட்டி, ஷிவம் மாவி, இஷான் போரல் போன்ற பல வீரர்கள் அத்தொடரில் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இளம் வீரர்களை வளர்க்க வேண்டும் என்பது மட்டுமே, தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிட் கொண்டிருந்த டார்கெட்டாக இருந்தது. 

அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பான நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்றார். ஜூனியர் வீரர்களை செம்மைப்படுத்திய கைகள், ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையும் மற்ற அடுத்த கட்ட முயற்சியில் இறங்கின. 

பி.சி.சி.ஐ தலைவர் கங்குலியுடன் இணைந்து உலகத்தரத்தில் புது நேஷனல் கிரிக்கெட் அகாடமியை அமைப்பது, புது கோச்சிங் கல்வி முறைகளை அறிமுகப்படுத்தி வீரர்களின் திறனை மேம்படுத்துவது, பயிற்சியாளர்களுக்கு தனிப் பயிற்சி அளிப்பது , தரமான மைதானங்களை உருவாக்குவது, சிறந்த நடுவர்களை உருவாக்குவது, வீரர்களுக்குக் காயங்கள் வராமல் தடுக்க கணினி உதவியுடன் கூடிய ஆராய்ச்சிகள், அண்டர் 19 அணிக்காக 40 முதல் 45 வீரர்களை உருவாக்க வேண்டும் எனப் பல்வேறு வேலைகளில் டிராவிட் இறங்கி, தற்போது வரை அதனை செயல்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் தான் டிராவிட்டின் ரசிகர்களுக்கு மற்றோரு இன்பச் செய்தி வந்துள்ளது. இந்திய சீனியர் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லவுள்ளது. இதற்கிடையில் இலங்கை அணியுடன் ஜூன் மாதத்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

ஆனால் கோலி, ரோஹித், ராகுல் என சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பிஸியாக இருப்பதினால் இம்முறை பிசிசிஐ வேறு ஐடியாவை கையில் எடுத்துள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்திற்கு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் தலைமையின் கீழ் புது அணியை அனுப்பவுள்ளது தான் அது. இச்செய்தி டிராவிட்டின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பேரின்பமாக அமைந்துள்ளது. 

இதுவரை இந்தியா ஏ, இந்தியா அண்டர் 19 அணிகளைக் கொண்டு புதுமுக நட்சத்திரங்களை உருவாக்கிய டிராவிட்டுக்கு, அவர்களைக் கொண்டு சர்வதேச போட்டிகளில் தடம்பதிக்க காத்திருக்கிறார். டிராவிட்டின் பயிற்சியின் கீழ் செயல்படவுள்ள இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகளவில் எழுந்துள்ளன.

TAGS

Related Cricket News ::

Most Viewed Articles