ஐபிஎல் 2021: கடந்தாண்டு தோல்வியைச் சரி செய்யுமா சிஎஸ்கே?

Updated: Tue, Apr 06 2021 11:54 IST
Image Source: GOOGLE

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் கடந்த மாதம் முதலே தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், 3 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த கடந்த சீசனில் மோசமாக விளையாடியது. ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறமுடியாமல் 7வது இடத்திற்கும் தள்ளப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் தனது முதல் ஆட்டத்தை வரும் 10ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.

சிஎஸ்கேவின் பலம்

ஒவ்வொரு ஐபிஎல் சீசன்களிலும் சிஎஸ்கே அணியின் பலமே அனுபவ வீரர்கள்தான். ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களில் வீரர்களின் அனுபவம் சிறந்த பலனைக் கொடுத்துள்ளது. அதேசமயம் உத்வேகம் அளிக்கும் தோனியின் தலைமைப்பண்பு மற்றொரு சிஎஸ்கே அணிக்கு சாதகமான விஷயம். 

மேலும் கடந்த அண்டு தனிப்பட்ட காரணங்களால் விலகிய சுரேஷ் ரெய்னா மீண்டும் திரும்பியிருப்பது பேட்டிங் வரிசையை வலுவடையச் செய்துள்ளது. 

தோனி, ரெய்னா, டூ பிளெஸ்ஸிஸ், அம்பத்தி ராயூடு, ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மொயின் அலி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் ஆகியோர் எத்திரணிக்குத் தலைவலியை ஏற்படுத்துவர் என்பதில் சந்தேகமில்லை. 

பந்துவீச்சில் ஜோஷ் ஹசில்வுட் விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், லுங்கி நிகிடி, ஷர்துல் தாக்கூர், சாம் கரண், தீபக் சஹார்  ஆகியோர் எதிரணியின் பேட்டிங் வரிசைக்குச் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சிஎஸ்கேவின் பலவீனம்

வயதான வீரர்களை அதிகம் உள்ளடக்கிய சிஎஸ்கே அணி கடந்த சீசனில் ஒட்டுமொத்தமாகப் படுமோசமாக விளையாடியது. டி 20 கிரிக்கெட்டில் சீனியர் வீரர்கள் தங்களது திறனை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, இம்ரன் தகிர் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்கள் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாததால் போதிய அளவிலான பயிற்சி இல்லாதது அணியின் திறனைப் பாதிக்கக்கூடும்.

வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் திடீரென விலகியுள்ளது பந்து வீச்சு துறையில் சற்று பலவீனத்தை உருவாக்கக்கூடும். மேலும் சர்வதேச போட்டிகள் காரணமாக சில வீரர்கள் தாமதமாகவே அணியுடன் இணைய உள்ளனர். காயத்திலிருந்து மீண்டுள்ள ஜடேஜா நீண்டகாலத்துக்குப் பிறகு களமிறங்குவதால் அவரது செயல் திறன் முழுமையாக வெளிப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்த சீசனில் அனைத்து ஆட்டங்களும் பொதுவான மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சை சார்ந்திருக்கும் சிஎஸ்கே அணியானது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மும்பை போன்ற ஆடுகளங்களுக்குத் தகுந்தவாறு திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.

சுழற்பந்து வீச்சில் அனுபவம், திறன் வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளனர். எனினும் வீரர்கள் தேர்வில் சரியான கலவையைக் கண்டறிந்து வாய்ப்பளிக்க வேண்டுமென்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

அணிவிவரம்: மகேந்திர தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயூடு, கே.எம்.ஆசிப், தீபக் சஹார், டுவைன் பிராவோ, டூ பிளெஸ்ஸிஸ், இம்ரன் தாஹீர்,ஜெகதீசன், கரண் சர்மா, லுங்கி நிகிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், சாம் கரண், சாய் கிஷோர், மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரி சங்கர் ரெட்டி, பகத் வர்மா, ஹரி நிஷாந்த்.

TAGS

Related Cricket News

Most Viewed Articles