ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஓர் பார்வை!

Updated: Tue, Mar 19 2024 16:22 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் இருமுறையும் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இரண்டு முறையும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறியது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதன்படி இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேஎல் ராகுல் தலைமையில் தனது அறிமுக சீசனிலேயே குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அந்த சீசனில் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தது தொடரிலிருந்து வெளியேறியது. அதன்பின் கடந்த சீசனிலும் சிறப்பாக செயல்பட்டு குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணி, மீண்டும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் மீண்டும் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடவுள்ளது. அதற்கேற்றவாறு அணியை கட்டமைத்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது அணியின் பயிற்சியாளர் குழு உள்ளிட்டவைகளையும் மாற்றியுள்ளது. அதன்படி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கரை நியமித்துள்ளது. இதனால் நடப்பு சீசனில் லக்னோ அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலம்

கடந்த இரண்டு சீசன்களிலும் எலிமினேட்டர் சுற்றுவரை முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே விலகிய கேப்டன் கேஎல் ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரில் முழு உடற்தகுதியுடன் விளையாடவுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு துணையாக அணியின் துணைக்கேப்டனாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் அணியின் நியமிக்கப்பட்டுள்ளது கூடுதல் உத்வேகமளிக்கிறது. மேலும் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமிக்கப்பட்டுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

நடப்பு சீசனுக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளன. குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், ஆஷ்டன் டர்னர், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளனர். இதில் கடந்த சீசனில் குயின்டன் டி காக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் பேட்டிங் துறையை வழிநடத்தினார். அவருடன் நடப்பு சீசனில் தேவ்தத் படிக்கல் அல்லது மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவர்களைத் தவிர்த்து நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, கேஎல் ராகுல், தீபக் ஹூடா ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தலைவலிதான். அவர்களைத் தொடர்ந்து அணியின் பந்வீச்சை எடுத்துக்கொண்டால் ரவி பிஷ்னோய், குர்னால் பாண்டியா போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களுடன் மொஷின் கான், யாஷ் தாக்கூர், ஷிவம் மாவி, மணிமாறன் சித்தார்த் போன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் வலிமையை சேர்த்துள்ளது. இவர்களைத் தவிர்த்து நடப்பு ஐபிஎல் தொடருக்கான லக்னோ அணியில் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அணியில் இருப்பது அணியின் பலத்தை கூட்டியுள்ளது. 

இவர்களுடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ், டேவிட் வில்லி, நவீன் உல் ஹக் போன்ற வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இருப்பது அணிக்கு பெரும் வலிமையாக பார்க்கப்படுகிறது. இவர்களில் மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் டேவிட் வில்லி ஆகியோரால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இப்படி பேட்டிங், பவுலிங்  என இரண்டிலும் சிறப்பான வீரர்களைக் கொண்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியான அணிகளில் ஒன்றாக கணிக்கப்படுகிறது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலவீனம்

நடப்பு சீசனுக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் வீரர்கள் காயம் தான் பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். அதன்பின் லண்டன் சென்று சிகிச்சைப் பெற்று நாடு திரும்பிய அவர், அதன்பின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபித்து இத்தொடரில் விளையாடவுள்ளார். மேலும் அவரது காயம் காரணமாக சில போட்டிகளில் அவரை விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டாம் என் என்சிஏ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் காயமடைய கூடும் என்ற அச்சம் அந்த அணி நிர்வாகத்திடம் உள்ளது. 

அதன்பின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் கடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது எலும்பு முறிவை சந்தித்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் அவரும் நடப்பு ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் இருந்தே விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களைத் தாண்டி அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸும் காயம் காரணமாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை தவறவிட்டுள்ளார். இப்போடி நட்சத்திர வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதால், இந்த ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் மிகப்பெரும் பிரச்சனையாக வீரர்களின் காயமடைவது பார்க்கப்படுகிறது.

இவர்களைத் தாண்டி குயின்டன் டி காக், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா போன்ற வீரர்களின் சமீபத்திய ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளது. மேற்கொண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. மேற்கொண்டு நான்கு வெளிநாட்டு வீரர்களில் நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், குயின்டன் டி காக் போன்ற வீரர்கள் அணியின் வெற்றிக்கு நிச்சயம் தேவை என்பதால் அவர்களைத் தாண்டி வேறு எந்த வெளிநாட்டு வீரர் அணியில் இடம்பிடிப்பார் என்ற குழப்பமும் நீடித்து வருகிறது. இப்படி இருகும் பிரச்சனைகளை சமாளித்து லக்னோ அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஐபிஎல் வரலாறு

  • 2022 - பிளே ஆஃப் சுற்று (எலிமினேட்டர்)
  • 2023 - பிளே ஆஃப் சுற்று (எலிமினேட்டர்)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், தீபக் ஹூடா, கிருஷ்ணப்பா கௌதம், க்ருனால் பாண்டியா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், பிரேராக் மன்காட், யுத்வீர் சிங் சரக், டேவிட் வில்லி, அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், ஷமார் ஜோசப், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, நவீன் உல் ஹக், ஷிவம் மாவி, மணிமாறன் சித்தார்த்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி அட்டவணை

இந்தியாவில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • மார்ச் 24 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜெய்ப்பூர்
  • மார்ச் 30 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், லக்னோ
  • ஏப்ரல் 02 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பெங்களூரு
  • ஏப்ரல் 07 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், லக்னோ
TAGS

Related Cricket News ::

Most Viewed Articles