ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஓர் பார்வை!

Updated: Fri, Mar 15 2024 19:26 IST
Image Source: Google

ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மேலும் இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அந்த வகையில் பாட் கம்மின்ஸ் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியாக அறிப்பட்ட ஹைதராபாத் அணியானது 2013ஆம் ஆண்டில் சன் குழும உரிமையைப் பெற்றபின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்ற புதிய அணியாக உருவெடுத்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும், ஒருமுறை இரண்டாம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது. அதுதவிர 6 முறை பிளேஆஃப் சுற்றுக்கும் முன்னேறியும் உள்ளது. ஆனாலும் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களை அந்த அணி நிர்வாகம் வெளியேற்றிய பிறகு கடந்த இரு சீசன்களாக புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு மோசமான முடிவுகளைப் பெற்றது. 

ஒருகாலத்தில் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றை சன்ரைசர்ஸ் அணி உறுதிசெய்யும் என பேசப்பட்ட நிலை மாறி தற்போது அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால் அதனை ஆச்சரியமாக பார்க்கும் நிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். காரணம் கடந்த மூன்று சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி படுதோல்விகளைச் சந்தித்ததுடன், புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலும் முடித்துள்ளது. இதனால் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பல மாற்றங்களைச் செய்துள்ள ஹைதராபாத் அணி இரண்டாவது கோப்பையை தன்வசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மிகவும் பலமிக்க அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான். ஏனெனில் உலகின் பல மேட்ச் வின்னர்களை அந்த அணி தன்வசம் வைத்துள்ளது. குறிப்பாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்திய சன்ரைசர்ஸ் அணி, நடப்பு சீசனுக்கான அணியின் புதிய கேப்டனாக அவரையே நியமித்து அதிரடி காட்டியுள்ளது. அதுதவிர மாயாஜால சுழற்பந்துவீச்சாளார் வநிந்து ஹசரங்கா, உலகக்கோப்பை நாயகன் டிராவிஸ் ஹெட் ஆகியோரையும் ஏலத்தில் எடுத்து அதிரடி காட்டியுள்ளது. 

அணியின் பேட்டிங் ஆர்டரை எடுத்துக்கொண்டால் ஐடன் மார்கம், ஹென்ரிச் கிளாசென் ஆகியோரது சமீபத்திய ஃபார்ம் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் சிறிது தயக்கத்தை கொடுக்கும் அளவில் உள்ளனது. இதில் ஒருவரும் நங்கூரம் போல் களத்தில் நின்று பின் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர், மற்றொருவர் முதல் பந்தில் இருந்தே சிக்சர்களை பறக்கவிட்ட அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தும் திறன் கொண்டவர். இவர்கள் சமீபத்தில் நடைபெற்று முடிந்த எஸ்ஏ 20 லீக் தொடரில் கூட இதனைச் செய்துக்காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர்களுடன் தற்போது டிராவிஸ் ஹெட்டும் இணைந்திருப்பது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திராலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள டிராவிஸ் ஹெட் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் தொடக்கத்திலேயே எதிரணி வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடியவராக இருப்பது அணிக்கு கூடுதல் பாலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி போன்ற வீரர்களும் இருப்பது அதிரடி மற்றும் நிதான ஆட்டத்தை சமமாக்கியுள்ளது. 

அணியில் ஆல் ரவுண்டர் வரிசையில் கிளென் பிலீப்ஸின் வருகை அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவரால் தொடக்க வீரர் மற்றும் நடுவரிசையில் களமிறங்க முடியும். மேலும் அணியின் விக்கெட் கீப்பராகவும், தேவைப்பட்டால் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களை நிலைகுழைய செய்யும், இல்லையெனில் ஃபீல்டிங்கில் பறந்து பறந்து ஃபீல்டிங் செய்யவும் அவரால் முடியும் என்பதால் அவரது இருப்பு அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு துணையாக மார்கோ ஜான்சென், வநிந்து ஹசரங்கா ஆகியோஉம் சமீப காலங்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி எதிரணிக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளனர். 

அவர்களுடன் அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ‘ஸ்விங் கிங்’ புவனேஷ்வர் குமார், எக்ஸ்ட்ரா பவுன்ஸோடு மிரட்டும் பாட் கம்மின்ஸ், மின்னல் வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக், யார்க்கர் நாயகன் நடராஜன் என வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். அவர்களுடன் மார்க்கோ ஜான்சென், ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரது சமீபத்திய ஃபார்மும் சிறப்பாக இருப்பது கூடுதல் பலமே. இப்பட்டி பேட்டிங்கில் அதிரடி, நிதானம் காட்டும் பேட்டர்கள், பந்துவீச்சில் வேகம், சுழல், ஸ்விங், யார்க்கர் என ஒவ்வொரு பிரிவிலும் சிறந்துவிளங்கும் வீரர்கள் இருக்கும் அணியாக ஹைதராபாத் அணி இந்த சீசனை எதிர்கொள்வுள்ளதால் அந்த அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் பலவீனம்

இந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் முக்கியமான பலவீனமே அவர்களது வெளிநாட்டு வீரர்கள் தான் என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கலாம். காரணம் பல திறமையான வீரர்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்கள் வசம் வைத்திருந்தாலும் அவர்களால் 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதே பெரும் சிக்கலாக உள்ளது. ஏனெனில் அணியின் கேப்டன் என்ற முறையில் பாட் கம்மின் தனக்கான இடத்தை எடுத்துக்கொள்வார். அவருடன் தவிர்க்க முடியாத தேர்வாக வநிந்து ஹசரங்காவும் தனது இடத்தைப் பிடித்துவிடுவார். இதனால் மீதமுள்ள இரு இடங்களை பிடிக்க மற்ற வெளிநாட்டு வீரர்கள் போட்டிபோட வேண்டி உள்ளது. 

அதிலும் அந்த போட்டியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், கிளென் பிலீப்ஸ் என உலகின் நட்சத்திர அதிரடி டி20 வீரர்களே. இதில் ஏற்கெனவே மோசமான இந்திய பேட்ஸ்மேன்களால் தத்தளிக்கும் சன்ரைசர்ஸ் அணியை கரைசேர்க்க உண்மையில் கிளாசென் மற்றும் மார்க்ரம் இருவருமே தேவை. இதனால் நிச்சயம் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஹைதராபாத் அணி தள்ளப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இல்லையெனில் பெரில் மட்டும் வலிமையான அணி என்னும் அவலத்தில் ஹைதராபாத் அணி தற்போது சிக்கியுள்ளது. 

இந்த பிரச்சைனை ஒருபக்கம் இருக்க இந்திய பேட்டர்களின் செயல்பாடும் பெரிதளவில் எடுபடாதது சன்ரைசர்ஸுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி போன்ற வீரர்கள் கடந்த சீசனில் சரிவர செயல்படாதது அணியின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமக பார்க்கப்படுகிறது. இதனால் இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருவேளை இந்த சீசனிலும் சன்ரைசர்ஸ் அணியின் இந்திய பேட்டர்கள் சொதப்பினால் நிச்சயம் மீண்டும் ஒரு ஏமாற்றத்தை சந்திக்க ஹைதராபாத் அணி தயாராக வேண்டியது தான்.

மேலும் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் வநிந்து ஹசரங்கா, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இருந்தாலும், அவர்களே அணியின் பலவீனமாகவும் பார்க்கப்படுகின்றனர். காரணம் இருவரும் அடிக்கடி காயத்தை சந்திக்க கூடிய வீரர்கள் என்பது தான். அதிலும் வாஷிங்டன் சுந்தர் அடிக்கடி காயத்தில் சிக்குவார் என்பது அணிக்கான ஒரு அச்சுறுத்தலாகவே தொடர் முழுவதும் இருக்கப் போகிறது. இப்பட்டி அணியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எப்படி விளையாடும் என்ற கேள்விக்கான பதிலை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் வரலாறு

  • 2013 - பிளே ஆஃப் சுற்று
  • 2014 - லீக் சுற்று
  • 2015 - லீக் சுற்று
  • 2016 - சாம்பியன்
  • 2017 - பிளே ஆஃப் சுற்று
  • 2018 - இரண்டாம் இடம் (ரன்னர் அப்)
  • 2019 - பிளே ஆஃப் சுற்று 
  • 2020 - பிளே ஆஃப் சுற்று
  • 2021 - லீக் சுற்று
  • 2022 - லீக் சுற்று
  • 2023 - லீக் சுற்று

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஐடன் மார்க்ரம் அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், உபேந்திர யாதவ், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, டிராவிஸ் ஹெட், வனிந்து ஹசரங்கா, ஜெய்தேவ் உனட்கட், ஆகாஷ் மஹராஜ் சிங், ஜாதவேத் சுப்ரமணியம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி அட்டவணை

இந்தியாவில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • மார்ச் 23 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா
  • மார்ச் 27 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாத்
  • மார்ச் 31 - குஜராஜத் ரைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அஹ்மதாபாத்
  • ஏப்ரம் 05 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத்
TAGS

Related Cricket News ::

Most Viewed Articles