இந்திய கிரிக்கெட்டின் ‘டர்பனேட்டர்’ #happybirthdayharbhajansingh

Updated: Sat, Jul 03 2021 12:59 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் பல தனித்துவமான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக சுழற்பந்து வீச்சாளர்கள் திகழ்கிறார்கள். ஏனெனில் ஆட்டத்தின் போக்கை அவர்கள் எப்போது வேண்டுமானலும் மாற்றக்கூடிய திறன் பெற்றவர்கள். 

அப்படி இந்திய கிரிக்கெட் அணிக்கு பல காலமாக முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தவர் ஹர்பஜன் சிங். இவர் 1980ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தார். இவரின் தந்தை சர்தார் சர்தேவ் சிங் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார்.

கிரிக்கெட் விளையாடி பழகிய ஆரம்பகாலத்தில் ஹர்பஜன் பேட்டிங் மீதே தீவிரம் கவனம் செலுத்தினார். ஆனால், அவருக்கு இயற்கையிலேயே சுழற்பந்து வீச்சு வந்தது. இதையடுத்து சுழற்பந்து வீச பயிற்சி எடுத்தார். அதில் கைதேர்ந்த நிலையில் இந்திய அணிக்கும் தேர்வானார்.

இதையடுத்து 1998ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்போது 18 வயதான ஹர்பஜன் சிங் தனது நேர்த்தியான மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து அதே ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஹர்பஜன் சிங் இடம் பிடித்தார்.

இதையடுத்து ஒருநாள், டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக இடம்பிடித்து ஆடினார். இதற்கிடையில் 2000ஆவது ஆண்டில் ஹர்பஜன் சிங்கின் தந்தை காலமானார். அதன்பின்னர் குடும்ப பொறுப்புகள் ஹர்பஜன் சிங் மீது விழுந்தன. தனது மூன்று சகோதரிகளுக்கும் ஹர்பஜன் சிங்தான் முன்னின்று திருமணம் நடத்திவைத்தார்.

ஹர்பஜன் இதுவரை 103 டெஸ்ட், 236 ஒருநாள் போட்டி, 28 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இரு முறை சதம் விளாசியுள்ளார். 9 அரை சதங்களும் அடித்துள்ளார்.

அதேபோல் டெஸ்ட்டில் 417 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் அறிமுகமானது போல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் பயணத்தையும் ஹர்பஜன் சிங் 2015ஆம் ஆண்டு முடித்துக்கொண்டார்.

அதன்பின்னர் தற்போது ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடிவருகிறார். இன்றளவும் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராகவும், இளைஞர்களின் உத்வேகமாகவும் திகழும் ஹர்பஜன் சிங் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். 

TAGS

Related Cricket News

Most Viewed Articles