உலகின் மிகவும் பிஸியான நான்கு கிரிக்கெட் வீரர்கள்..!
உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் தங்களை பிஸியாக வைத்திருக்கும் நான்கு வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது பல நாடுகளில் சர்வதேச கிரிக்கெட் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல நாடுகளில் கடுமையான பயோ பபுள் பாதுகாப்புகளுடன் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்படி நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் உலகின் பல அதிரடி வீரர்கள் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
Trending
இப்படி உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் தங்களை பிஸியாக வைத்திருக்கும் நான்கு வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்..!
ஆண்ட்ரே ரஸ்ஸல்
வெஸ்ட் இண்டீஸின் ஆபத்தான ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல். இவர் ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் தற்போது அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடுவார்.
இத்தொடர்களுடன் அவர் நின்று விடவில்லை. அதனைத் தொடர்ந்து தனது சொந்த நாட்டின் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸுக்காக விளையாடவும் உள்ளார். உ
உலகின் மிகவும் பிஸியான வீரராக திகழும் ரஸ்ஸல் இதுவரை 335 டி 20 போட்டிகளில் விளையாடி 6,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதே போல் 315 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபாஃப் டூ பிளெஸிஸ்
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸிஸ். இவர் ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, பிஎஸ்எல் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாட டூ பிளெஸிஸ் தயாராகி வருகிறார்.
இது தவிர, அவர் கரீபியன் பிரீமியர் லீக் 2021 இல் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளா. உலகின் அதிரடி பேட்ஸ்மேனாக கருத்தப்படும் டூ பிளெஸிஸ் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 6,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதில் 41 அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும்.
ரஷீத் கான்
ஆஃப்கானிஸ்தான் அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான். சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு வில்லனாக இருக்கும் இவர், டி20 லீக் போட்டிகளிலும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ரஷீத் கான், அந்த அணியின் தவிர்க்க முடியா வீரராகவும் கருதப்படுகிறார்.
மேலும் இவர், ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் சிபிஎல், பாகிஸ்தானின் பிஎஸ்எல் உள்ளிட்ட அனைத்து முன்னணி டி20 லீக் தொடர்களிலும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
இதுவரை 259 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் 360 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்ரான் தாஹிர்
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், தற்போது பிஎஸ்எல், சிபிஎல் தொடர்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
அதன்படி பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தானின் சுல்தான்ஸ் அணிக்காகவும், சிபிஎல் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
ரசிகர்களால் பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் 42 வயதான இம்ரான் தாஹிர், 308 டி 20 போட்டிகளில் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.