#Onthisday: விண்டிஸை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்தியாவில் தற்போதுள்ள இளம் தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக் கோப்பை என்றாலே 2011 இல் "லாங் ஆன்" திசையில் தோனி அடித்த சிக்ஸரும் நினைவுக்கு வரும். ஆனால் இதே நாளில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, அப்போதைய கிரிக்கெட் ஜாம்பவான்களான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
அப்போது நாடே இந்த வெற்றியை பெரும் கொண்டாட்டமாவே பார்த்தது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அப்போது வைக்கப்பட்ட செல்லப் பெயர் "கபில்ஸ் டெவில்ஸ்".
Trending
கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வழிமுறையாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதன்படி 1975ஆம் ஆண்டு மற்றும் 1979 ஆம் ஆண்டு என முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட்டில் கோலொச்சியிருந்தது.
ஆனால் அதைத்தொடர்ந்து நடைபெற்ற 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாம்வான்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரிக்கெட்டில் வளர்ந்து வந்துகொண்டிருந்த இந்தியா அணியிடம் தனது சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தது. இத்தொடர் குறித்த சில தகவல்களைப் பதிவில் காண்போம்.
கடந்த1983 ஆம் ஆண்டு புருடென்ஷியல் உலகக் கோப்பை போட்டி ஜூன் 9 முதல் 25ஆஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இத்தொடரின் லீக் போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில், அதைத்தொடர்ந்த போட்டிகள் அனைத்து நாக் அவுட் முறையிலும் என மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெற்றன.
1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை முற்றிலும் எதிர்பாராத விதமான முடிவுகளை அளித்தது. இதிலும் 60 ஓவர் அடிப்படையிலேயே போட்டி நடத்தப்பட்டது. 15 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. அதன்படி ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை அணிகளும், பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றன.
இந்தியா தனது லீக் ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸை 34 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 5 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 31 ரன்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 118 ரன்கள் வித்தியாசத்திலும், வென்றது.
இதனையடுத்து அரையிறுதி சுற்றுகள் நடைபெற்றன. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தானும், பி பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது உலகக்கோப்பையைக் கைப்பற்ற தயாரானது.
இறுதிச் சுற்றில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய சொன்னது. அப்போது உலகிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சைக் கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணியில் ஸ்ரீகாந்த் 38, அமர்நாத் 26 ரன்களை சேர்த்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. எளிதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிப்பெற்றுவிடும் என அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் இந்திய பவுலர்கள் மிக திறமையாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. இந்தியாவுக்காக முதல் முதலாக உலக் கோப்பையை கையில் ஏந்திய கபில் தேவ் இந்திய கிரிக்கெட்டை வழிநடத்திய மிகச்சிறந்த கேப்டனாகவும் உருவெடுத்தார்.